முன்மொழியப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் சட்டமூலத்திற்கு சுதந்திர ஊடக இயக்கம் எதிர்ப்பு

fmm-srilanka

முன்மொழியப்பட்ட “ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் சட்டமூலம்” (Prevention of Organised Crimes Bill), இலங்கையில் கருத்துச் சுதந்திரம் உள்ளிட்ட அடிப்படை மனித உரிமைகளுக்கும் ஜனநாயக கட்டமைப்பிற்கும் அச்சுறுத்தலாக அமைகின்றது. இதன் காரணமாக, சுதந்திர ஊடக இயக்கம் (Free Media Movement – FMM) இச்சட்டமூலத்திற்கு தனது எதிர்ப்பைத் தெரிவிக்கின்றது.

குறிப்பாக, ஊடகச் சுதந்திரத்தையும் புலனாய்வு ஊடகவியலையும் குற்றமாக்கக்கூடிய இச்சட்டமூலத்தின் ஏற்பாடுகள் குறித்து சுதந்திர ஊடக இயக்கம் விசேட கவனம் செலுத்துகின்றது.

இச்சட்டமூலத்தின்படி, பாரதூரமான குற்றங்கள் அல்லது ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் தொடர்பான நீதிமன்ற நடவடிக்கைகள் பற்றிய தகவல்களை முன் அனுமதியின்றி அறிக்கையிடுவது முற்றாகத் தடை செய்யப்படுகின்றது. இதன் விளைவாக, அரச ஆதரவுடன் இடம்பெறும் குற்றங்கள், பொலிஸ் சித்திரவதைகள் அல்லது ஊழல் மோசடிகள் தொடர்பில் புலனாய்வு ஊடகவியலாளர்கள் மேற்கொள்ளும் வெளிப்படுத்தல்கள், “விசாரணைகளுக்குத் தடையாக அமைதல்” எனப் பொருள்கொள்ளப்பட்டு, ஊடகவியலாளர்களைச் சிறையில் அடைப்பதற்கான சட்ட அடிப்படையை அரசாங்கத்திற்கு இச்சட்டமூலம் வழங்கக்கூடும்.

இது ஊடகச் சுதந்திரத்திற்கு மிகப்பெரும் சவாலாக அமைவதுடன், தகவல்களை அறிந்துகொள்வதற்கான பொதுமக்களின் உரிமையையும் முடக்குகின்றது.

கருத்துச் சுதந்திரம் மற்றும் அமைதியான ஒன்றுகூடலுக்கான உரிமைக்கு அச்சுறுத்தல் அடிமட்ட மக்களின் கருத்துச் சுதந்திரத்தையும் ஒன்றிணைந்து அமைப்புகளாகச் செயற்படுவதற்கான உரிமையையும் பறிப்பதற்கான முயற்சியாகவும் இச்சட்டமூலம் காணப்படுகின்றது.

இச்சட்டமூலத்தில் “ஒழுங்கமைக்கப்பட்ட கும்பல்” மற்றும் “பாரதூரமான குற்றம்” ஆகிய சொற்கள் மிகவும் விரிவானதும் தெளிவற்றதுமான வகையில் வரையறுக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக, தாங்கள் எதிர்கொள்ளும் நியாயமான பொருளாதார மற்றும் சமூகப் பிரச்சினைகளுக்கு எதிராக அடிமட்டக் குடிமக்கள், விவசாயிகள், மீனவர்கள் அல்லது தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து முன்னெடுக்கும் அமைதியான ஆர்ப்பாட்டங்கள் மற்றும் எதிர்ப்புப் போராட்டங்கள்கூட “ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள்” என முத்திரை குத்தப்படும் அபாயம் காணப்படுகின்றது.

மேலும், சமூக ஊடகங்கள் ஊடாக அரசாங்கத்தை விமர்சிப்பதையும் அநீதிகளுக்கு எதிராக மக்கள் ஒன்றிணைந்து அமைப்பாகச் செயற்படுவதையும் கட்டுப்படுத்துவதன் மூலம், சமூகத்தில் அச்சத்தையும் தயக்கத்தையும் ஏற்படுத்தும் சூழலை (Chilling Effect) இச்சட்டமூலம் உருவாக்கக்கூடும்.

மனித உரிமைகளுக்கும் ஜனநாயகத்திற்கும் பாரிய சவால் இவற்றுக்கு அப்பால், மனித உரிமைகளுக்கும் ஜனநாயகத்திற்கும் இச்சட்டமூலம் பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றது.

நீதிமன்ற விசாரணையின்றி பாதுகாப்பு அமைச்சரின் உத்தரவின் பேரில் சந்தேகநபர்களை நீண்டகாலம் தடுத்து வைப்பதற்கும் (Detention Orders), பொலிஸாரிடம் வழங்கப்படும் ஒப்புதல் வாக்குமூலங்களைச் சாட்சியங்களாக ஏற்றுக்கொள்வதற்கும் இச்சட்டமூலம் இடமளிக்கின்றது.

இத்தகைய ஏற்பாடுகள் நியாயமான விசாரணையைப் பெறுவதற்கான உரிமையை (Right to a Fair Trial) முற்றாக மீறும் அபாயத்தைக் கொண்டுள்ளதுடன், பொலிஸ் நிலையங்களில் சந்தேகநபர்கள் சித்திரவதைக்கு உட்படுத்தப்படுவதற்கும் வழிவகுக்கக்கூடும்.

நீதித்துறை மேற்பார்வையின்றி நிறைவேற்று அதிகாரத்திற்கும் பொலிஸாருக்கும் அளவற்ற அதிகாரங்களை வழங்குவதன் மூலம், சட்டத்தின் ஆட்சி பலவீனமடையும் அபாயம் உள்ளது. இதன் விளைவாக, நாடு படிப்படியாக ஜனநாயகக் கட்டமைப்பிலிருந்து விலகி, அடக்குமுறைமிக்க பொலிஸ் அரசொன்றை நோக்கிச் செல்லும் நிலை உருவாகலாம்.

குற்றங்களைத் தடுப்பதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் நாட்டில் ஏற்கனவே போதுமான பொதுச் சட்டங்கள் நடைமுறையில் உள்ள நிலையில், அரசியல் நிகழ்ச்சி நிரல்களுக்காக இத்தகைய தன்னிச்சையானதும் மனித உரிமைகளுக்கு முரணானதுமான சட்டமூலங்களை முன்வைக்கும் நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்பதே சுதந்திர ஊடக இயக்கத்தின் நிலைப்பாடாகும்.

எனவே, நாட்டின் குடிமக்களின் அடிப்படை உரிமைகளையும் ஜனநாயக வெளியையும் பாதுகாக்கும் நோக்கில், முன்மொழியப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் சட்டமூலத்தை உடனடியாகவும் நிபந்தனையின்றியும் மீளப்பெறுமாறு சுதந்திர ஊடக இயக்கம் அரசாங்கத்தைக் கோருகின்றது.

பணியாளர்களின் டிஜிட்டல் கருவி

Image