நவீன காலத்திற்கு ஏற்ற வகையில் தொழிலாளர் சட்டங்கள் திருத்தப்பட வேண்டும் – தொழிலாளர் பிரதி அமைச்சர் தெரிவிப்பு

anton-marcus

காலாவதியான தொழிலாளர் சட்டங்கள் மற்றும் கட்டளைச் சட்டங்களுக்குப் பதிலாக, தற்போதைய காலத்திற்கு ஏற்ற வகையில் தொழிலாளர் சட்டங்களைத் திருத்துவதற்கான காலம் வந்துள்ளதாக தொழிலாளர் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

நாட்டின் தொழிலாளர் சமூகத்தின் உரிமைகளை மேலும் பாதுகாக்கும் வகையில் தேவையான புதிய திருத்தங்களை அறிமுகப்படுத்துவதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

உத்தேச தொழிலாளர் சட்டத் திருத்தங்கள் தொடர்பாக தொழிற்சங்கங்களின் கருத்துகள் மற்றும் முன்மொழிவுகளைப் பெற்றுக்கொள்வதற்காக இன்று (28) தொழிலாளர் அமைச்சில் நடைபெற்ற மேல் மாகாண ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டபோதே பிரதி அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

தொழிலாளர் திணைக்களத்தினால் நிர்வகிக்கப்படும் சட்டங்கள் மற்றும் கட்டளைச் சட்டங்களை நவீன காலத்திற்கு ஏற்ற வகையில் திருத்துவதற்கான முன்மொழிவுகளைத் தயாரிப்பதற்காக, தொழிலாளர் அமைச்சின் செயலாளர் தலைமையில் கடந்த ஆண்டு அமைச்சரவை உபகுழுவொன்று நியமிக்கப்பட்டது.

அந்த உபகுழுவினால் தயாரிக்கப்பட்ட முன்மொழிவுகள் தொடர்பில் தொழிற்சங்கங்கள், தொழில் வழங்குநர்கள் மற்றும் பொதுமக்களின் கருத்துகளைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் மாகாண மட்டத்தில் தொடர்ச்சியான ஆலோசனைக் கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

உத்தேச திருத்தங்கள் தொடர்பான முன்மொழிவுகள் கடந்த ஆகஸ்ட் மாதம் 07ஆம் திகதி தேசிய தொழிலாளர் ஆலோசனைச் சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன், முன்மொழியப்பட்ட மாற்றங்கள் தொடர்பில் அச்சபையின் கருத்துகளும் பரிந்துரைகளும் பெற்றுக்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதனுடன் இணைந்ததாக, தொழிற்சங்கங்கள், இலங்கை தொழில் வழங்குநர்கள் சம்மேளனம் உள்ளிட்ட தொடர்புடைய தரப்பினரின் கருத்துகள் மற்றும் முன்மொழிவுகளையும் கருத்திற்கொண்டு, புதிய தொழிலாளர் சட்டத் திருத்தங்களுக்கான இறுதி வரைவு தயாரிக்கப்படவுள்ளது.

உத்தேச திருத்தங்கள் தொடர்பில் கருத்துத் தெரிவித்த தொழிலாளர் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க, உற்பத்திப் பொருளாதாரத்தை விரிவுபடுத்தி தேசியப் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதும் புதிய தொழிலாளர் சட்டங்களை அறிமுகப்படுத்துவதன் மற்றுமொரு முக்கிய நோக்கமாகும் எனக் குறிப்பிட்டார்.

அனைத்துத் தொடர்புடைய தரப்பினரின் கருத்துகள் மற்றும் முன்மொழிவுகளையும் கருத்திற்கொண்டே உத்தேச சட்டமூலத்தின் இறுதி வரைவு தயாரிக்கப்படும் என்றும் பிரதி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் கலந்துகொண்ட தொழிற்சங்கப் பிரதிநிதிகளுக்கு, உத்தேச தொழிலாளர் சட்டத் திருத்தங்கள் தொடர்பான தமது பிரச்சினைகள், கருத்துகள் மற்றும் முன்மொழிவுகளை முன்வைப்பதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் தொழிலாளர் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க, தொழிலாளர் அமைச்சின் செயலாளர் எஸ். எம். பியதிஸ்ஸ மற்றும் தொழிலாளர் ஆணையாளர் நாயகம் நதீகா வட்டலியத்த ஆகியோர் கலந்துகொண்டு, தொடர்புடைய விடயங்கள் குறித்து விளக்கமளித்தனர்.

 

பணியாளர்களின் டிஜிட்டல் கருவி

Image