சட்டவிரோதமாக இஸ்ரேலில் உள்ள இலங்கையர்கள் தொடர்பில் வெளியான தகவல்

சட்டவிரோதமாக இஸ்ரேலில் தங்கியிருந்த இலங்கையர்களுக்கு விசா வழங்குவதில் தமக்கு உடன்பாடில்லை என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலில் இராணுவ மோதல்களுக்கு மத்தியில் விசா இன்றி இருப்பவர்கள் இஸ்ரேலில் உள்ள இலங்கை தூதரகத்துக்கு தகவல்களை வழங்குமாறு வெளிவிவகார அமைச்சு முன்னதாக தெரிவித்திருந்தது.
இதன்படி, விசா புதுப்பித்தல் தொடர்பாக இஸ்ரேலில் உள்ள இலங்கைத் தூதரகத்துக்கு சுமார் 2 ஆயிரம் கோரிக்கைகள் வந்துள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.
முன்னதாக, இஸ்ரேலில் செல்லுபடியாகும் விசா இன்றி சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்களை இஸ்ரேலில் விவசாய தொழில்துறை வேலை வாய்ப்புகளுக்கு அனுப்பும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுமென இஸ்ரேலுக்கான இலங்கை தூதரகம் அறிவித்திருந்தது.
எவ்வாறாயினும், விசா இன்றி இஸ்ரேலில் தங்கியுள்ளவர்களுக்கு விசா வழங்கும் செயற்பாட்டுக்கு தாம் ஆட்சேபனை தெரிவிப்பதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளனர்.
இலங்கையின் சட்டத்துக்கு புறம்பாக வெளிநாடு சென்றவர்களுக்கு விசா வழங்குவதை ஏற்றுக் கொள்ளமுடியாது.
அத்துடன், வெளிநாடுகளில் ஏற்படும் எத்தகைய மோதல்களின்போதும் அங்குள்ள இலங்கையர்களை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுப்பதில் அரசாங்கம் உறுதியாகவுள்ளதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
மூலம் - சூரியன் செய்திகள்