அரச மற்றும் அரசு சார் துறைகளில் ஊழியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

நாட்டில் அரச மற்றும் அரசு சார் துறைகளில் தொழில் புரிந்து வரும் மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை 11 இலட்சத்து 50,000 க்கும் மேல் அதிகரித்துள்ளதுள்ளதாக ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.
2024ஆம் ஆண்டு குடிசன, புள்ளிவிபரவியல் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் ஆரம்ப அறிக்கையின்படி, அரச மற்றும் அரசு சார் துறைகளில் மொத்தமாக 11,50,018 ஊழியர்கள் பணிபுரிந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் 50.5 வீதமானோர் ஆண் ஊழியர்கள் எனவும் 49.5வீதமானோர் பெண் ஊழியர்கள் எனவும் அந்த திணைக்களத்தின் அறிக்கை தெரிவிக்கின்றது.
2016ஆம் ஆண்டுக்குப் பின்னர், அனைத்து அரச மற்றும் அரசு சார் துறை நிறுவனங்களின் ஊழியர்களின் முழுமையான ஆய்வு கடந்த ஆண்டிலேயே நடத்தப்பட்டது.
அதன்படி, நாட்டின் அரச துறையில் 938,763 ஊழியர்களும், அரசு சார் துறையில் 217,255 ஊழியர்களும் பணியாற்றுவது பதிவு செய்யப்பட்டுள்ளது. 2016ஆம் ஆண்டு ஆய்வின்படி, அரச மற்றும் அரசு சார் துறைகளில் மொத்தம் 11,19,475 ஊழியர்கள் பணிபுரிந்துள்ளனர். அதன்படி, 2024 ஆய்வில் இந்த எண்ணிக்கை 46,543 ஆக அதிகரித்துள்ளது.
இந்த அறிக்கையின்படி, அரச துறையில் பணியாற்றும் ஊழியர்களில் பெரும்பாலானோர், குறிப்பாக 59.5 வீதமானோர் மத்திய அரசின் கீழ் பணியாற்றுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆய்வின்போது சுமார் 32,500 அரச மற்றும் அரசு சார் நிறுவனங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக குடிசன மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.எவ்வாறாயினும், அரசு சார் நிறுவனங்களின் துணை நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் இந்த ஆய்வில் உள்ளடக்கப்படவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.மேலும், இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை ஆகியவற்றைச் சேர்ந்த ஊழியர்களும் இந்த ஆய்வில் உள்ளடக்கப்படவில்லை என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது. அரசு சார் துறையிலுள்ள மலையக பெருந்தோட்ட தோட்டத் தொழிலாளர்களும் இந்த ஆய்வில் உள்ளடக்கப்படவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மூலம் - தினகரன்