6 ஆண்டுகளாக கிடப்பில் உள்ள 2.1 மில்லியன் ரூபா பெறுமதியான CCTV கமராக்கள்

6 ஆண்டுகளாக கிடப்பில் உள்ள 2.1 மில்லியன் ரூபா பெறுமதியான CCTV கமராக்கள்
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பிரதான காரியாலயத்தில் உள்ளக வளாகத்தில் பொருத்துவதற்காக கொள்வனவு செய்யப்பட்ட CCTV கமரா கருவிகள் 6 வருடங்களாக பொருத்தப்படாமல் களஞ்சியத்தில் கிடப்பில் உள்ளதால் அவற்றைப் பொருத்துவதற்கு விரைவாக நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கக் கணக்குகள் பற்றிய (கோபா) குழுவின் தலைவர் இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்திற்கு அறிவித்தார்.
 
2017ஆம் ஆண்டில் 2.1 மில்லியன் ரூபா செலவில் கொள்வனவு செய்யப்பட்ட இந்தக் கமராக்களுக்குத் தேவையான அனைத்து உபகரணங்களும் இல்லை எனவும் அதில் ஒரு பகுதி மாத்திரமே கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவந்தது. அது தொடர்பில் தலையிட்ட அதிகாரிகளும் தற்பொழுது இடமாற்றம் பெற்றுக்கொண்டுள்ளதாகவும் தெரியவந்தது.
 
இவ்வாறான நிறுவனங்களுக்கு கமரா கருவிகளைப் பொருத்துவதற்கு சிலர் விரும்புவதில்லை எனச் சுட்டிக்காட்டிய குழுவின் தலைவர், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் ஒருவரின் தலைமையில் குழுவொன்றை நியமித்து CCTV கமரா அமைப்பை பொருத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் மே 15 க்கு முன்னர் அதன் முன்னேற்றம் குறித்து அறிவிக்குமாறும் அறிவுறுத்தினார்.
 
குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் 2020, 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கைகள் மற்றும் தற்போதைய செயலாற்றுகை தொடர்பில் ஆராய்வதற்காக அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு (கோபா) அண்மையில் (02) கூடியபோது இந்த விடயம் குறித்துக் கவனம் செலுத்தப்பட்டதாக பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image