அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்துடன் ஜனாதிபதி சந்திப்பு

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்துடன் ஜனாதிபதி சந்திப்பு

நவீன மருத்துவ சேவைகளுக்கு உகந்த வகையில் புதிய தொழில்நுட்ப மாற்றங்களுக்கு அமைய எமது நாட்டின் சுகாதார சேவையில் ஏற்படுத்தப்படவுள்ள புதிய மாற்றங்கள் குறித்து விரிவான கலந்துரையாடலை நடத்த எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்துடன் நேற்று (23) நடைபெற்ற சந்திப்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் “தலைமைத்துவம் மற்றும் திறன் மேம்பாடு” என்ற தலைப்பில் ஒரு நாள் செயலமர்வு நேற்று (23) பொலன்னறுவையில் ஆரம்பமானது. உத்தியோகபூர்வ நிகழ்வு ஒன்றில் பங்கேற்க பொலன்னறுவைச் சென்றிருந்த ஜனாதிபதிக்கு, இந்நிகழ்வில் இணைந்துகொள்ள திடீர் அழைப்பு விடுக்கப்பட்டது.

அதன்படி, சொற்ப நேரத்திற்கு அவ்விடத்திற்குச் சென்ற ஜனாதிபதி, அரச வைத்திய அதிகாரிகள் சங்க உறுப்பினர்களுடன் சிநேகபூர்வ உரையாடலில் ஈடுபட்டார்.

இலங்கையில் காலனித்துவக் காலத்திலிருந்து இலவச மருத்துவ முறைமை காணப்படுவதாகவும், அதனை முழு உலகமும் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அந்த கடந்த கால அனுபவங்களுடன் நாட்டில் தரமான மற்றும் உயர்தர சுகாதார சேவைகள் உறுதிப்படுத்தப்பட வேண்டுமெனவும் சுட்டிக்காட்டினார்.

சுகாதார சேவையில் செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்களை இணைப்பதற்கான சாத்தியக்கூறுகளை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, எதிர்வரும் 10 முதல் 15 ஆண்டுகளுக்குள் இந்தப் புதிய மாற்றங்களை முன்னெடுப்பதற்குத் தேவையான திட்டங்களைத் தயாரிப்பதற்காக சுகாதாரத் துறையிலுள்ள அனைவருடனும் பரந்த உரையாடலை நடத்த எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

அதற்கான யோசனைகளையும் ஆலோசனைகளையும் வழங்குமாறு அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்திற்கு அழைப்பு விடுத்த ஜனாதிபதி, இந்த கலந்துரையாடல்கள் அனைத்தையும் அரசியல்மயப்படுத்தாமல் தர்க்கரீதியாக மேற்கொள்வதன் முக்கியத்துவத்தையும் விளக்கினார்.

இந்நிகழ்வில் ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்னாயக்க, அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் டொக்டர் ஹரித அலுத்கே உள்ளிட்ட சங்க உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image