பயிலுநர் பட்டதாரி நியமனம் பெற்றவரா? உங்களுக்கே இந்த அழைப்பு...

பயிலுநர் பட்டதாரி நியமனம் பெற்றவரா? உங்களுக்கே இந்த அழைப்பு...

குறைக்கப்பட்டுள்ள மகப்பேற்று விடுமுறை தினங்கள் தொடர்பில் உயரதிகாரிகளுக்கு தெரியப்படுத்த விரும்புகிறவர்கள் எம்முடன் இணையுங்கள் என்று ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் மத்திய நிலையம் அதன் முகப்புத்தகத்தில் பயிலுநர் பட்டதாரிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

பட்டதாரி பயிலுநர்களாக 2020ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் சேவையில் இணைக்கப்பட்டுள்ள பட்டதாரிகளுக்கான மகப்பேற்று விடுமுறைத் தினங்கள் குறைக்கப்பட்டமை தொடர்பில் தொடர்ச்சியாக போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் இவ்வறிவிப்பு வௌியாகியுள்ளது.

அவ்வறிவித்தலில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, நீங்களும் அரசாங்கத்தின் பயிலுநர் பட்டதாரி நியமனத்தில் இணைத்துக்கொள்ளப்பட்டவரா? நாம் ஒன்றிணைந்த பட்டதாரிகள் மத்திய நிலையம் என்றரீதியில் கடந்த செப்டெம்பர் மாதம் 9ம் திகதி மனித உரிமை ஆணைக்குழுவுக்கு முறைப்பாடு செய்தோம். தொடர்ச்சியாக போராட்டங்களையும் முன்னெடுத்தோம். மிகவும் கவலைக்குரிய விடயம் என்னவெனில் ஒரு பட்டதாரி தாயோ தந்தையோ எமக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை. வழக்கு தொடர முனைந்தோம். ஒருவர் கூட முன்வரவில்லை. நிதி சேகரித்தோம் 46,000 பட்டதாரிகளிடமிருந்து 3700 ரூபா மட்டுமே சேகரிக்க முடிந்தது.

எனினும் நாம் போராட்டத்தை கைவிடவில்லை. தொழிற்சங்கங்களை இணைத்து அரசசேவைகள், மாகாணசபை மற்றும் உள்ளூராட்சி சபை அமைச்சர், அமைச்சின் செயலாளர் ஆகியோருக்கு கடந்த 24ம் திகதி கடிதம் மூலம் 84 நாட்கள் மகப்பேற்று விடுமுறை நாட்கள் வழங்குவதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை தயாரித்து சமர்ப்பிக்குமாறு கோரிக்கை விடுத்தோம். எனினும் அமைச்சின் செயலாளர் இன்றும் மௌனம் காக்கின்றார். இன்றும் 6 வாரங்கள் மட்டுமே மகப்பேற்று விடுமுறை அனுமதிக்கப்படுகிறது. பெப்ரவரி மாதம் முதலாம் திகதி சேவையில் இணைக்கப்பட்டவர்களுக்கும் அதுதான் நியதி. நாம் போராட்டத்தை கைவிடவில்லை. மகப்பேற்று விடுமுறைத் தினங்களை குறைத்தமை தொடர்பில் அரச உயரதிகாரிகளுக்கு தெரிவிக்க எம்முடன் இணைய விரும்புகிறவர்கள் 071 4 176 030 / 077 9 663 856 என்ற இலக்கத்துடன் தொடர்புகொள்ளுங்கள். இது எமது கடைசி முயற்சி என்று குறிப்பிடப்பட்டுள்ளது

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image