தேயிலைத் தொழிலாளியின் ஓலம்!

தேயிலைத் தொழிலாளியின் ஓலம்!

பக்கிங்ஹாம்
மாளிகையின் தெருமுனையில்
அதோ
ஒரு சிறுமி
காத்துக் கொண்டிருக்கிறாள்,
கையில்
பூங்கொத்துடன் - தன்
மகாராணிக்கு
அஞ்சலி செலுத்த.
அவளது மனம்
அரண்மனையின்
அத்ததுனை கதவுகளிலும்
முட்டி மோதி
திரும்பி வருகிறது,
ஆனால்....
அவளும்
ஒருநாள் அந்த மாளிகையின்
இளவரசியாகலாம்!
அன்று
அவளுக்கு
நாங்கள் சொல்லுவோம்,
மகாராணியானின்
ஆண்ட பரம்பரை
எங்கள்
ஆயிரமாயிரம்
இளவரசிகளின் கனவுகளை
இலங்கையில்
புதைத்த கதையை.
எங்கள்
மீதெழுதிய
அடிமைசாசனத்தின்
ஆணிவேர் இன்றும்
இலங்கை மண்ணில்
ஆழமாய்
புரையோடியிருப்பதை.
எங்களை
மறந்து நீங்கள்
அருந்திய
"சிலோன் டீ" யின்
வாசம் என்பது
எங்களது வியர்வையின்
நாற்றம் என்பதை
அவளுக்கு அறிவிப்போம்.
எத்தனை
மகாராணிகள் வந்தாலும்
மீட்டெடுக்க
முடியாத இடத்தில்
எங்களை ஈடு வைத்து;
கிடைத்ததில் வாழும்
வாழ்க்கைக்குப் பட்டம்
மகாராணி என்பதை
அவளுக்கு பறைசாற்றுவோம்.
ஆதிக்குடி
அழகு தமிழ்
பரம்பரை வாழ்க்கை என
சரித்திரம் பேசிய
பூமியின் பங்காளிகளான
எங்களை
அநாதையாக்கிய
பேரரசு
உங்களது அரசு என்பதை
அவளுக்கு எழுதிக்கொடுப்போம்.
உங்கள்
வெள்ளைத் தோலின்
விகாரத்தில்
எங்களது
உழைப்பின் வடு
உரசிக்கொண்டிருப்பதை
அவளுக்கு காட்டுவோம்.
எங்களது
சாபம் ஒருநாள்
உங்கள்
தேசத்தை எரிக்கும்
அதுவரை
நீங்கள் சுமப்பது
மகுடமல்ல
எங்களது பாவம்
என்பதை
அந்த இளவரசிக்கு
புரியவைப்போம்.

மாத்தளை_கவி

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image