தொழில் சட்டங்களில் மாற்றம் தேவை – ருத்ரதீபன்

தொழில் சட்டங்கள் இன்னும் பழைய முறைமையிலேயே உள்ளன. காலத்திற்கு ஏற்றவாறு தொழிலாளர் சட்டங்கள் மாற்றப்பட வேண்டும் என தெற்காசிய பிராந்திய தொழிற்சபையின் பிரதிப் பொதுச்செயலாளரும், இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் நிர்வாக செயலாளரும், தேசிய தொழிற்சங்க சம்மேளனத்தின் பிரதித் தலைவரும் ஊவா மாகாண சபை உறுப்பினருமான வேலாயுதம் ருத்ரதீபன் தெரிவித்துள்ளார்.

அவர் எமது இணையத்தளத்துக்கு வழங்கிய செவ்வி,

கேள்வி – தற்போதைய அரசியல் மற்றும் சமூக பின்னணியில் தொழிற்சங்கங்களின் நிலைமைகள் மற்றும் அதன் முக்கியத்துவம் என்பன எவ்வாறுள்ளன?

பதில் – தற்போதைய அரசியல் நிலைமைகளின் அடிப்படையில் தொழிற்சங்கங்களின் ஈடுபாடு சற்று குறைவாகவே உள்ளது. உலகமயமாக்களின் பின்னர், அனைத்து துறைகளிலிரும் தொழிலாளர்களின் உரிமைகள் மீறப்பட்டு வருகின்றன.

இலங்கையைப் பொறுத்தவரையில் 68 வீதமானோர் முறைசாரா தொழிலாளர்களாக உள்ளனர். அந்த தொழிலாளர்களுக்கான ஒரு உரிமைகள் கூட தற்போதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.

நேரக்கட்டுப்பாடு இல்லை, குறைந்த ஊதியம் என்பன உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை அவர்கள் எதிர்கொள்கின்றனர். கொழும்பை எடுத்துக்கொண்டால் வர்த்தக நிலையங்களில் பணிபுரிவோர், வீட்டுப் பணியாளர்கள், கட்டிடத் தொழிலாளர்கள் போன்றோருக்கு இதுபோன்ற உரிமைகள் எதுவுமே கிடைப்பதில்லை.

இதேநேரம் பெருந்தோட்ட தொழில்த்துறையை எடுத்துக்கொண்டால், கூட்டு ஒப்பந்தம் ஊடாக பெற்றுக்கொடுக்கப்பட்ட எந்தவொரு வேலைத்திட்டமும் இதுவரை சரியான முறையில் நடைமுறைப்படுத்தப்படவில்லை. இவவாறான நிலைமையே தொழில்த்துறையில் உள்ளது.

கேள்வி – தொழிற்சங்கங்கள் தொடர்பில் மக்கள் தற்போது எவ்வாறான அபிப்பிராயத்தைக் கொண்டுள்ளனர்? மக்கள் மத்தியில் தொழிற்சங்கங்களுக்கான செல்வாக்கு தொடர்ந்தும் உள்ளதா?

பதில் – தொழிற்சங்களில் தொழிலாளர்களின் ஈடுபாடு மிகவும் குறைவாக உள்ளது. பெருந்தோட்டத் துறையில் மாத்திரமே 60 வீதமானோர் தொழிற்சங்கத் துறையில் அங்கம் வகிக்கின்றனர். ஆனால், ஏனைய தனியார் துறைகளில் ஒரு விதமானோர் கூட தொழிற்;;சங்கத் துறையில் இல்லை. கட்டிட நிர்மாணத்துறை, வெளிநாட்டு வேலைவாய்ப்புத்துறை, ஆடைதொழில் துறை மற்றும் கொழும்பில் பணிபுரியும் சிற்றூழியர்கள் மற்றும் முச்சக்கர வண்டிச் சாரதிகள் ஆகியோருக்கு தொழிற்சங்கம் இல்லை. அவர்களுக்கு தொழிற்சங்கம் தொடர்பில் சரியான தெளிவூட்டல்கள் இல்லை. அதனால், தொழிற்சங்கத்தில் இணைய அவர்கள் ஈடுபாடு காட்டுவதில்லை.

கேள்வி – தொழிற்சங்கத்தை அடிப்படையாகக் கொண்ட அரசியல் தொழிலாளர்களின் நலன்களில் பாதிப்பை ஏற்படுத்தாதா?

பதில் – இன்றைய நிலையில் மலையகத்தைப் பொருத்தவரை அனைத்து தொழிற்சங்கங்களும் அரசியலே நடத்துகின்றன. ஆனால், அரசியல் வேறாகவும், தொழிற்சங்கம் வேறாகவும் இருக்க வேண்டும். எமது தொழிற்சங்கத்தை எடுத்துக்கொண்டால், நாம் அரசியலில் ஈடுபட்டாலும், அரசியல் தனியாகவும், தொழிற்சங்கம் தனியாகவுமே செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. இரண்டையும் ஒன்றாக இணைப்பதில்லை.

சில கட்சிகள் அரசியல் ரீதியாக முன்னெடுக்கும் பணிகளை தொழிற்சங்க அடிப்படையிலேயே மேற்கொள்கின்றன. தொழிற்சங்கங்களை அடிப்படையாகக் கொண்டே அரசியல் நலன்களும் மக்களைச் சென்றடைகின்றன. எனவே, அரசியல் அற்ற தொழிற்சங்கம் உருவாகப்பட வேண்டும். இந்த நிலை ஏற்படும் வரையில் மலையத்தில் பாரிய மாற்றத்தை எதிர்ப்பார்க்க முடியாது.

கேள்வி – உங்கள் தொழிற்சங்க போராட்டம் மூலமாக போராடிப் உரிமைகள் பெற்றுக்கொண்ட சந்தர்ப்பம் உள்ளதா?

பதில் – பெருந்தோட்டத் துறையை எடுத்துக்கொண்டால், ஆண், பெண் ஆகிய இருவருக்கும் சம சம்பளத்தைப் பெற்றுக்கொடுக்கவும், சமமான வேலை நேரத்தை பாகுபாடின்றி வழங்கவும் எமது தொழிற்சங்கமே நடவடிக்கை எடுத்தது.

அத்துடன், ஆரம்ப காலத்தில் 10 பைசா, 20 பைசா என வழங்கப்பட்ட சம்பளத்தை ரூபா அடிப்படையில் மாற்றியது இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம்தான். இவை அனைத்துக்கும் கூட்டு ஒப்பந்தம் ஊடாக நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அத்துடன், எமது தந்தையார் காலத்தில்தான் (மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர் கே.வேலாயுதம்) பெருந்தோட்ட மக்களுக்கு பசுமை பூமி திட்டத்தில் காணி உரிமைக்கான அடிக்கல் நாட்டப்பட்டது. அதை யாராலும் மறுக்க முடியாது.

இவ்வாறாக மக்களின் நலனுக்காக பல்வேறு போராட்டங்களை மேற்கொண்டு பல உரிமைகளைப் பெற்றுக்கொடுத்த இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் 60ஆண்டு கால வரலாற்றுடன் பயணித்துக்கொண்டிருக்கின்றது.

கேள்வி – தற்போதைய அரசியல் சமூக சூழ்நிலைகளில் தொழிற்சங்கள் எவ்வாறான சவால்களை எதிர்கொள்ளவேண்டிய நிலையில் உள்ளன?

பதில் – நாடாளாவிய ரீதியில் எடுத்துக்கொண்டால், தொழில் சட்டங்கள் இன்னும் பழைய முறைமையிலேயே உள்ளன. காலத்திற்கு ஏற்றவாறு தொழிலாளர் சட்டங்கள் மாற்றப்பட வேண்டும்.

தொழிலாளர் நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. வழக்குகளை தாக்கல் செய்தவர்கள், பிரசன்னமாவதில்லை அல்லது அவர்கள் உயிருடன் இருப்பதில்லை. 6, 7 ஆண்டுகளுக்கு மேலாக வழக்குகள் தொடர்கின்றன. எனவே, தொழில் சட்டங்கள் மாற்றப்பட வேண்டும். இந்த சட்டங்கள் மாற்றப்படாதுள்ளமை தொழிலாளர்களுக்கு பாரிய சவாலாக உள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435