அதிபர்-ஆசிரியர்களுக்கு கல்வி அமைச்சின் விசேட அறிவித்தல்

கொவிட்-19 வைரஸ் பரவுவதால் கடந்த மார்ச் 13 ஆம் திகதி தொடக்கம் மூடப்பட்ட நாட்டின் அனைத்து பாடசாலைகளும் நாளை (29) மீண்டும் திறக்கப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் டலஸ் அழகபெருமவின் வழிகாட்டுதலின்கீழ், மாணவர்களின் சுகாதாரப் பாதுகாப்பு குறித்து முழு கவனம் செலுத்தி இரண்டாவது தவணையை நான்கு கட்டங்களில் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, முதல் கட்டத்தில் மாணவர்கள் பாடசாலைகளுக்கு வரவழைக்கப்படுவதில்லை என்பதோடு அனைத்து அரச பாடசாலைகளிலும் அதிபர்கள், துணை அதிபர்கள், ஆசிரியர்கள், கல்விசாரா ஊழியர்கள் மற்றும் பாடசாலை முகாமைத்துவ குழு உறுப்பினர்கள் மட்டுமே அழைக்கப்படுவார்கள்.

நாளை (29) முதல் ஜூலை 5 வரை தொடங்கும் இந்த திட்டத்தின் முதல் கட்டமாக, பாடசாலையில் துப்புரவு செய்தல், கிருமி நீக்கம், கைகழுவுதல் வசதி மற்றும் பிணியாளர் அறை வசதிகள் உள்ளிட்ட சுகாதார வசதிகள் மேற்கொள்ளப்படுவதோடு, மாணவர்கள் பாடசாலைக்கு அழைக்கப்பட்ட பின் கற்பித்தல் செயற்பாடு நடைபெறும் விதம் குறித்த முன்கூட்டிய திட்டமிடல் செயற்பாடு அதிபர்கள், கல்வி மற்றும் கல்விசாரா பணியாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதற்காக கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார பாதுகாப்பு முறைகள் மற்றும் அறிவுரைகள் தற்போது அனைத்து மாகாண அதிகாரிகள் ஊடாக பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதோடு, பாடசாலைகளுக்கு முழு ஆதரவையும் வழங்க மாகாண சுகாதார அதிகாரிகளும் பாதுகாப்பு படையினரும் இணக்கம் தெரிவித்துள்ளார்கள்.

இந்த திட்டத்தின் இரண்டாம் கட்டம் ஜூலை 6 ஆம் திகதி தொடங்கும் போது 13, 11 மற்றும் 5 ஆம் தரங்களில் உள்ள மாணவர்கள் மட்டுமே இந்த கட்டத்தில் அழைக்கப்படுவார்கள்.

பாடசாலையின் மூன்றாம் கட்டம் ஜூலை 20 ஆம் திகதி ஆரம்பிக்கப்ப்பட்டு 12 மற்றும் 10 ஆம் தர மாணவர்கள் பாடசாலைகளுக்கு அழைக்கப்படுவார்கள். நான்காவது கட்டத்தில், 3, 4, 6, 7, 8 மற்றும் 9 ஆம் தரங்களுக்காக பாடசாலைகள் ஜூலை 27 ஆம் திகதி தொடங்கும். 1 மற்றும் 2 ஆம் தரங்களில் உள்ள மாணவர்களுக்கு எதிர்காலத்தில் அறிவிக்கப்படும்.

கல்வி அமைச்சின் செயலாளர் இது தொடர்பாக ஒரு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளதோடு, அதில் கூறப்பட்டவாறு அனைத்து பாடசாலைத் தலைவர்களும் சுகாதார அதிகாரிகள் வழங்கிய அறிவுறுத்தல்களின்படி பிள்ளைகளின் சுகாதார பாதுகாப்பினை உறுதிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கல்வி அமைச்சு மேலும் கேட்டுக்கொண்டுள்ளது.

ஊடக பிரிவு

கல்வி அமைச்சு

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435